நாத்திகவாதி......................
8ம் வகுப்பு முடித்தவுடன் 9ம் வகுப்பிற்கு மேட்டூர் ஆர்। எஸ் பகுதியிலுள்ள வைதீஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு சேர்க்கப்பட்டேன்। கொஞ்சம் கட்டுப்பாடு நிறைந்த பார்ப்பன நிருவாகம் காரணம் கெம்ப்ளாஸ்ட் சன்மார் நிருவனம் நடத்தும் பள்ளி, ஆசிரியர்களுக்கு மட்டும் அரசு சம்பளம்। நான் ஒன்றும் பெரிய படிப்பாளி அல்ல। பள்ளிப்பருவத்தில் நான் ஒரு சராசரி மாணவன் தான்। இந்த காலத்தில் தான் ஆர். எஸ் பகுதியில் இரயில்வே காலணி சுவற்றில் கானப்படும் பகுத்தறிவு பிரச்சார கேள்விகளை எனக்குள் கேட்டுக்கொண்டேன். 10ம் வகுப்பு படிக்கும்போது அவ்வப்போது சாமி கும்பிடுவதும் சில நேரம் கடவுள் இல்லையோ என்று மாறி மாறி தடுமாற்றம் இருந்தது. மதிப்பென் வாங்கவேண்டும் என்ற எண்ணம்தான் அப்போது கடவுளிடம் வேண்டுவதற்கு ஒரு காரணமாக இருந்தது. அதே ஆண்டில் எனக்கு அம்மை நோய் வந்துவிட எனக்காக என் பெற்றோர் வேண்டிக்கொண்டதாகவும் அதற்காக நான் கரகம் எடுக்கவேண்டும் என்று கூரினர். இதற்காக நான் வேட்டியணிந்து மேலே ஒரு பணியனுடனும் தலையில் பூங்கரகத்துடனும் தெப்பக்குளத்திலிருந்து கூட்டத்தோடு கூட்டமாக வந்தவனுக்கு ஏகப்பட்ட வெட்கம் இப்படி நான் இந்த கரகத்தை சுமந்துகொண்டும் கடவுள் உண்டா இல்லையா என்ற கேள்வியுடனேயே வந்துகொண்டிருந்தேன், நான் அப்போது திட்டிப்பார்க்கலாம் என்ன ஆகுமென்று என்பதற்க்காக மாரியாத்தாளை நான் திட்டயதெல்லாம் நான் இங்கு எழுத முடியாது. ஆனால் எது எப்படியோ என் சித்தி வீட்டு வழியாக நான் செல்லும்போது உறவினர்கள் வந்து பணம் குத்துவார்கள் பாருங்கள் அதற்காகவே மீண்டும் மீண்டும் கரகம் எடுக்கலாம், இப்படி இரண்டு வருடம் எடுத்தவன் மூண்றாம் வருடம் எடுக்க மறுத்துவிட்டேன். அதன் பிறகு கோயிலுக்கு போவதில்லை, வீட்டிலும் சாமி கும்பிடுவதில்லை. என்னை பல கல்யாணங்களுக்கு பெற்றோர் அழைத்தும் என் மாமன்மார்களின் திருமணத்திற்குகூட போனதில்லை, இந்த சடங்கு எழவெல்லாம் பொறுத்திருந்து பார்க்க பொறுமையில்லை என்பதும் ஓர் காரணம். நான் 12ம் படிக்கும்போது மார்கழி மாதத்தில் போடப்படும் ஐயப்பன் பக்தி பாடல்கள் ஏற்படுத்திய எரிச்சலும், கல்லூரி செல்லும் வழியில் பேருந்து செல்வதற்கு இடையூறாக நடத்தப்பட்ட கோயில் திருவிழாக்களும் இந்த சிரமங்கள் எதற்காக என்ற கேள்வி என்னை உறுத்திக்கொண்ட நேரத்தில் என்னோடு பேருந்தில் வரும் ஒரு கல்லூரி தோழன் ஏதோ விவாதத்தில் கல்யாணத்திற்கு எதற்கு தாலி என்றான். எனக்குள் இவன் பேசுவது குதர்கமாக தெரிந்தாலும் நியாயமாக தெரிந்தது. ஆனால் இதை யார் ஒப்புக்கொள்வார்கள் என்று வாதிட்டேன். இதே வாதத்தை எங்கள் சித்தி வீட்டில் நடந்த ஒரு விசேசத்தில் என் உறவினர்களிடம் வைத்து நான் தாலிகட்டப்போவதில்லை, என்றும் சாமியெல்லாம் ஒரு கல், கல்யாணத்திற்கு ஒரு ஐயர் தேவையில்லை, அவனுக்கு எதற்கு அரிசி, பழம், தேங்காய், என்று என நான் வைத்த வாதம் அவர்களை மாற்றிவிடவில்லை ஆனால் நான் ஒரு உருப்படாதவன் என்ற முத்திரை குத்தப்பட்டது. இந்த பையன் என்ன இப்படி பேசிகிட்டு திரியிறான் என்ற கேள்வி என் உறவினர்கள் மத்தியில் இருந்தாலும் நான் ஒரு புத்திசாலி என்ற எண்ணம் இருந்தது, விளையாட்டிற்காகவே என்னை சீண்டி வேடிக்கை பார்ப்பதும், நான் பேசும் சமுதாய கருத்துகளை அவர்கள் ரசிப்பதும் அண்றாட நிகழ்வுவாகிப்போனது. 12ம் வகுப்பில் ஓரளவு மதிப்பென் பெற்ற எனக்கு நான் விண்ணப்பித்த நாண்கு கல்லூரிகளிலுமே இடம் கிடைத்தது. அதில் நான் தேர்ந்தெடுத்த கல்லூரிதான் ஈரோடு வாசவி கல்லூரி. நான் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் என் தன்நம்பிக்கையை வெகுவாக உயர்த்தியது.
சமுதாயப்பார்வை..................
எனக்கு சமுதாயத்தின் மீது முதலில் பற்று ஏற்பட ஒரு சாதியியக்கம் தான் என்று கூறினால் பலருக்கும் மாறுபட்ட கருத்து வரலாம் அல்லது என்னை ஒரு சாதி உணர்வாளனாககூட பார்க்கலாம், ஆனால் எனக்கு சமுதாய உணர்வு ஏற்பட இதுவே காரணம், 1985-86ம் ஆண்டுகளாக இருக்கலாம் தமிழகமெங்கும் ஒரு குறிப்பிட்ட சாதியின் உரிமைக்காக ஒரு சங்கம் தொடங்கப்பட்டு பெருமளவில் எழுச்சி கானப்பட்டது, ஒரு வாரம் பந்தெல்லாம் நடந்து இட ஒதுக்கீட்டுக்காக போராடினார்கள். எனக்கு அப்போதிருந்த அறிவிற்கும் மனப்பக்குவத்திற்கும் அந்த உணர்வு நியாயமாகபட்டது. ஆனால் பின்னாளில் தமிழ்தேசிய, பெரியாரிய இயக்கங்களால் கவரப்பட்ட நேரத்தில் நான் ஒரு உண்மையான சாதி மறுப்பாளானாகவே இருந்து வருகிறேன். இன்றும் அதே சாதியியக்கம் தொடங்கிய தலைவர் சமுதாய கருத்துக்களை வைப்பதை அரசியலுக்கு அப்பாற்பட்டு நான் நியாயமான கருத்துக்கள் என்று நம்புகிறேன். ஆனால் அதற்காக அவர் அன்று பேசிய வசனங்களில் இருந்து தன் அரசியல் கட்சியை எப்படியெல்லாம் மாற்றி நடத்துகிறார் என்பதை அறியாதவனல்ல அதே சமயம் நியாயமான கருத்துகளை யார் பேசினாலும் ஆதரிப்பதில் தவறில்லை என்றே கருதுகிறேன்.
கல்லூரி பயணம்...................
ஈரோடு வாசவி கல்லூரிக்கு வீட்டிலிருந்து தினமும் சுமார் 3.30 மனி நேரம் பயனித்துக்கொண்டிருந்தேன். மேட்டூர்-ஈரோடு சாலையின் இடதுபுறம் காவேரி எங்களோடு ஓடி வருவாள் ஆற்ற்ங்கரைக்கும் சாலைக்குமிடையே பசுமையான நெல்வயல்கள், சாலையின் வலதுபுறம் தொடர்ச்சியான மலைகள், மலைக்கும் சாலைக்கும் இடையே நெல்வயல்களின் பசுமை மணைதை தாலாட்டும். மழைக்காலங்களில் மலைகளின் மீதிருந்து இரண்டுமூண்று இடங்களில் சிறு ஊற்றுக்கள் அருவியாய் கொட்டும். திருமகள் பேருந்தில் வாசவி கல்லூரி மாணவர்கள் தான். நண்பர்கள் கூட்டத்துடன் குதுகலமாய் இன்னிசை பாடலகளை ரசித்துக்கொண்டே சிலுசிலுவென வயல்வெளி காற்றில் பறப்பதுபோல் பறந்தது மூண்று ஆண்டுகள். வாழ்வின் மிக பசுமையான காலம், சில நேரம் வாழ்வின் பொற்காலத்தை எப்படி வீணடித்திருக்கிறோம் என்று தோன்றும். ஏழு ஆண்டுகளுக்கு பின் மேட்டூரை சேர்ந்த ஒருவன் கல்லூரி மாணவர் தலைவனான். அவனுக்கு நண்பர்கள் விதித்த ஒரே நிபந்தனை வாரம் ஒரு ஸ்டரைக் நடத்தவேண்டும். கல்லூரி தேர்தல் நட்க்கும் விதம் என்னை முதலில் வியப்பில் ஆழ்த்தியது. ஒரே நோட்டீஸ் மயம், பட்டாசுகள், ஆள் கடத்தல், கத்திக்குத்து, வேட்பாளரின் பெற்றோரை கடத்தி மிரட்டுதல், அடியாட்களுடன் ஒவ்வொரு வேட்பாளரும் 40 முதல் 50 கார்களின் அனிவகுப்பு, அரசியல்கட்சிகளின் பின்னனி என கல்லூரியே விழாக்கோலமும் ஆட்டமுமாக இருக்கும். பெரும்பாலான வெள்ளிக்கிழமைகள் ஸ்டரைக்தான். சில நேரங்களில் எதிர்பாராமல் வாரத்தின் முதல் நாளே ஸ்டரைக் நடக்கும். சுமார் 2 மனி நேரம் பயணித்து வந்தால் விசில் சத்தம் விண்ணை பிளக்கும். சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலை-47 ல் ஒரே சமயத்தில் நாண்கு பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு பேருந்துகள் நடுரோட்டில் நிறுத்தப்படும். மிக விருவிருப்பான அந்த சாலையின் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டு மக்கள் வேதனையோடு தவிப்பதையெல்லாம் சிறிதும் பொருட்படுத்தாமல் அலட்சியமாக பேருந்துகளில் இருந்த பெண்களை சைட் அடிப்பதிலேயே முணைப்புகாட்டுவது. உள்ளூர் அரசு பேருந்தில் பயணச்சீட்டு எடுப்பதில்லை மீறினால் கூட்டமாக சேர்ந்து ஓட்டுனரையும், நடத்துனரையும் தாக்குவது. சில சமயம் அவர்கள் லிவராலும் மற்ற ஆயுதங்களாலும் டிப்போவிற்குள் வைத்து தாக்கிய கதையும் நடந்துள்ளது. கல்லூரியின் பின்புறம் உள்ள காட்டில் கில்லி விளையாடுவது. அருகிலுள்ள ஐஆர்டிடி பொறியியல் கல்லூரி மாணவர்களை ராகிங் செய்வது, இப்படி ஏகப்பட்ட அக்கிரமங்கள் நடக்கும் கல்லூரியில் மாணவர் சங்க தலலவராகி பின்னாளில் தமிழக அமைச்சரானவர்தான் சு.முத்துசாமி. தேர்தலுக்கு முன் ஒருநாள் முடிந்தவரை ஆட்களை ஏற்றிக்கொண்டு ஏதாவது ஒரு கல்யாண மண்டபத்திலோ, பெரிய ஹாலிலோ நீலப்படம் காட்டுவது, குறைந்த விலை மதுபாணங்களை அதிக அளவில் வினியோகிப்பது, பிரியாணி, பணம் என எல்லா தேர்தல் சமய வேலைகளும் கல்லூரியிலேயே ஆரம்பித்துவிடுகிறது. அதுமட்டுமல்லாமல், சிலர் பலான பலான உல்லாசத்திற்கு போவதும் உண்டாம். இதற்கெல்லாம் மகன் ஆளாகிவிடகூடாது என்பதற்காக ஹாஸ்டலில் தங்க நான் அனுமதிக்கப்படவில்லை. என் கல்லூரி காலத்தில் எந்த பெண்ணிடமும் பேசியதே இல்லை என்பதுதான் என் கல்லூரி வாழ்விலேயே வருத்தமான செய்தி. ஆனால் ஸ்டரைக் நாட்களில் லாரி பிடித்து குமாரப்பாளையத்தில் உள்ள கௌரி தியேட்டரிலோ, ஈரோடு நடராஜாவிலோ 'A' படம் பார்த்ததும் அங்கேயும் எங்கள் நண்பன் ஒருவன் படத்தை பார்க்காமல் நாங்கள் வாசவி காலேஜ் கம்பியூட்டர் சையிண்ஸ் ஸ்டூடண்ட்ஸ் என்று பெருமைபட மாணத்தை வாங்கியதும், ஒருவன் பல சந்தேகங்களை கிளப்பி எந்த விவரமும் அறியாத மற்ற எல்லோரையும் நச்சரித்ததும் மறக்கமுடியாதது. அவனுக்கும் எங்களுக்கும் கடைசி வரை புரியாமல் இருந்த கேள்வி இதுதான் என்னடா அங்க ஒன்னுமே தெரியல என்பதுதான் யாருக்கு தெரியும்? ஒருவழியாக வேர்த்து வியர்த்து வெளியே வந்து அவரவர் வீட்டிற்கு நல்லபிள்ளைகளாய் போய்கொண்டிருந்தோம். தேர்தல் சமயத்தில் ஆர்வக்கோளாரில் முதல்முறையாக இரண்டு குவாட்டர்களை ராவாக கவுத்தது தெரியாமல் உள்ளே போனதும், அன்று அணிந்திருந்த புதிய உடையுடன் ரோட்டோரமாய் கிடந்ததும் தான் பின்னர் என் டைரிகுறிப்பில் என் சகோதரிகள் படித்துவிட்டனர். வாழைமட்டையை காதில் பிழிந்துவிட்டும் சோடாவால் முகத்தை கழுவியதும் பேருந்தில் என்னை தூக்கிப்போட்டது, மக்கள் அதை வேடிக்கை பார்த்ததும் நான் என்னையே கேவலமான நிலையில் பார்த்தது. அன்று யார் யார் என்னென்ன சொல்லி திட்டினார்களோ. ஆனால் இப்படி ரோட்டோரமாய் கிடந்ததிலும் ஒரு சுகமும் பருத்திவீரன் போல ஒரு வரட்டு பெருமையும் இருந்தது. அப்படியெல்லாம் இன்று கிடக்கமுடியாதே.
கல்லூரியிலிருந்து பல்கலைகழகம்.............
கல்லூரி நாட்களை நினைத்து சந்தோசப்பட ஏராளமான விசயங்கள் உண்டு, நான் காலங்கடந்துதான் மேற்படிப்பிற்கு விண்ணப்பிக்க தொடங்கினேன். முதலில் அழகப்பா பல்கலைகழகத்தில் எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.எஸ்.சி ஆகிய படிப்புகளுக்கு விண்ணப்பித்தேன். அதோடு என்னுடைய கல்லூரி நண்பர்கள் நாண்கு பேரையும் அழகப்பா பல்கலைகழகத்திற்கு விண்ணப்பிக்க சொன்னேன். மேலும் வெங்கடேஸ்வரா பல்கலைகழத்தில் நடந்த ஆந்திர பொது தேர்விற்காக திருப்பதிக்கு போனேன். கடைசி வரை போகலாமா வேண்டாமா? என்ற கேள்வியிலேயே இருந்தவன் திடீரென கிளம்பிவிட்டேன். அதுவரை அவ்வள்வு தொலைவு தனியாக பயனித்தது இல்லை. திருப்பதி எங்கு இருக்கிறது என்றும் தெரியாது. சேலத்தில் வந்து திருப்பதி பேருந்தில் இடம் கிடைப்பதில் சிரமம் இருந்தது. நடத்துனர் பயனச்சீட்டின் விலைக்கு மேல் தரவேண்டுமென்றார் வேறுவழியில்லாமல் ஒப்புக்கொண்டேன். பயனச்சிட்டை வாங்கிகொண்டு உள்ள அமர்ந்தவனிடம் அதிக தொகையை கேட்க 10 ரூபாய் கொடுத்தேன், அவரோ 20 ரூபாய் கேட்டார், பத்து ரூபாய்க்குமேல் கொடுக்கமுடியாது என்று கூற அவர் பத்து ரூபாயையும் திருப்பி கொடுத்துவிட்டார். சரியாக 9.15 மனிக்கு வெங்கடேஸ்வரா பல்கலைகழகத்தில் எனக்கான தேர்வு அறையில் நுழைந்தேன். பல் விலக்கவும் இல்லை குளிக்கவும் இல்லை, தேர்வில் அகில இந்திய அளவில் 8300 தாண்டி ஏதோ ஒரு ராங்க் கிடைத்தது. எந்த தயார் நிலையும் இல்லாமலே இந்த ராங்க் கிடைத்தது. எனது சீனியர் ஒருவர் பல்கலைகழகத்தில் இடம் பிடித்திருந்தார், கோயமுத்தூரில் அந்நாளில் சிறந்த கல்லூரியாக கருதப்பட்ட பி.எஸ்.ஜியிலும் ஒருவர் சேர்ந்திருந்தார். எனவே இந்த இந்த இரு கல்விக்கூடங்களுக்கும் விண்ணப்பித்தேன். அழகப்பா பல்கலைகழத்தின் நுழைவு தேர்விற்கு நாண்கு பேரும் ஒன்றாக தேர்வெழுத சென்றோம், மதியம் திருச்சியில் அளவிற்கு அதிகமாக உணவருந்திவிட்டு காரைக்குடி நோக்கி பயணித்தோம். எனக்கு திருச்சியே முதல்முறை, காரைக்குடியில் ஒரு லாட்ஜில் அனைவருக்கும் 50 ரூபாய் வாடகை என்று தங்கினோம். முதலிலே பல்கலைகழத்தை பார்த்துவிட வேண்டுமென சுமார் 7.00 மணிக்கு பல்கலைகழத்திற்கு சென்றோம். இரவின் மின்னொளியில் பல்கலைகழகத்தின் நிருவாக கட்டிடத்தைப் பார்த்து படித்தால் இங்கு படிக்கவேண்டும் என்று எனக்குள் ஒரு எண்ணத்தோடு ஆனால் பல்கலைகழகத்தில் ஒரு சராசரி எப்படி இடம் பிடிப்பது என்று ஒரு கேள்வியும் வந்தது. அடுத்த நாள் எனக்கு இரண்டு நுழைவு தேர்வுகள் இரண்டு தேர்வையும் எழுதிய பின்னர் ஒரு நம்பிக்கை இருந்தது, நாமும் இங்கே சேர வாய்ப்பு இருக்கிறது என்று. அன்று மற்ற அனைவரும் பிள்ளையார் பட்டிக்கு போயிருந்தார்கள். அனால் நான் அடுத்த நாள் தேர்விற்கு தயாரானேன், விடிய விடிய கொசுக்கடி, விடிந்தால் லாட்ஜ் ஓனரிடம் ஏதோ சண்டை வந்துவிட அனைவரும் காலி செய்துவிட்டோம், மற்ற மூவரும் உடனே ஊருக்கு கிளம்பிவிட, சற்று வருத்தத்துடன் தேர்விற்கு போனவனுக்கு நல்ல தூக்கம். ஆனால் திருப்தியாகவே விடைகளை எழுதிவிட்டு தனியாக ஊருக்கு திரும்பினேன். அன்றிரவு 9.30 மணிக்கு வீட்டிற்கு வந்துவிட்டேன். முதன்முறையாக பாரதியார் பல்கலைகழகத்திற்கு சென்றவனுக்கு கோவையின் மக்கள் வித்தியாசமாக தெரிந்தார்கள். ஊரே வித்தியாசமாக இருந்தது. சிலுசிலுவென குளிர்ந்தகாற்று, இனிக்கும் சிறுவாணி தண்ணீர், சற்று வெந்நிறமான மக்கள், கொஞ்சம் சுகமாக வாழ்பவர்கள் போல் அலட்டிக்கொள்ளாத ஊராக இருந்தது. பல்கலைக்கழக பேருந்து நிறுத்தத்தில் இறங்கியவனை இயற்கை எழில் கொஞ்சும் மருதமலையும் பல்கலைகழகத்தின் தோற்றமும் நமக்குள் ஒரு கம்பீரத்தை கொடுத்தது. அங்கே உள்ளிருந்து வெளியே இனையாக வந்த மாணவ கூட்டம் பேசிய ஆங்கிலம் சட்டென தம்பி நீ இங்க படிக்கிறதெல்லாம் கஷ்டம்பா என்பதுபோல் இருந்தது. இருந்தாலும் இவ்வளவு தூரம் வந்துவிட்டோம் ஒரு விண்ணப்பத்தை வாங்கிவிடுவோம் என்றால், வங்கிக்கும் பதிவாளர் அலுவலகத்திற்கும் நடந்து அலுத்துவிட்டது. ஒருவழியாக விண்ணப்பத்தை வாங்கியாகிவிட்டது. உள்ளே இருப்பவர்கள் எல்லாம் பெரிய அறிவு ஜீவிகளாக இருப்பார்கள் என்று பயந்தவனுக்கு அப்படி ஒன்றும் மிரட்டும் விதமாக இல்லை. இதற்கிடையே அழகப்பா பல்கலைகழகத்தில் இரண்டு நேர்முக தேர்விற்கான அழைப்புகள் வெவ்வேரு தேதிகளில் வந்தது. இரண்டு நேர்முக தேர்விலும் கலந்துகொண்டவனுக்கு நிச்சயம் ஏதாவது ஒன்றில் வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கை பிறந்தது.
Thursday, December 20, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment